
திருச்சி மாநகர், அதிமுக மாவட்ட மருத்துவர் பிரிவு தலைவராக இருந்தவர் சுப்பையா பாண்டியன். இவர், இன்று (22.07.2021) திமுகவின் முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என். நேருவை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்தச் சந்திப்பு சென்னை, மயிலாப்பூரில் உள்ள அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் நிகழ்ந்தது.
நடந்து முடிந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட மனோகரனுக்கு ஆதரவாக இவர் தேர்தலில் பணியாற்றியிருந்தார். சுப்பையா, அகில இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துவருகிறார். அதிமுகவில் இருந்தபோது இவர், திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவ அணி தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.
திருச்சி மாநகர் பகுதியில் கார்த்திக் சித்த மருத்துவம் என்று சொந்தமாக சித்த மருத்துவமனை நடத்திவரும் இவர், தற்போது திமுகவில் இணைந்திருப்பது அதிமுக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அவருடைய மனைவி தமிழரசி சுப்பையா, இன்றும் அதிமுகவில் இருந்துவருகிறார்.