மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தனர். வடக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்காக இந்தியா வழங்கிய மானியத்தின் கீழ் கட்டப்பட்ட திட்டங்களைப் பார்வையிடவும், யாழ்ப்பாணம் கலாச்சார மையமானது இந்தியா இலங்கைக்கு இடையேயான நல்லுறவுக்கான எடுத்துக்காட்டு என்பதை பிரதிபலிக்கும் நோக்கிலும் இந்தப் பயணம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய இணை அமைச்சர் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை திரும்பினர். அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் கலாச்சார மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த யாழ்ப்பாண கலாச்சார மையம் முழுமையான இந்திய அரசாங்கத்தின் நிதியில் கட்டப்பட்டு யாழ்ப்பாண பகுதியில் உள்ள மக்களுக்கும் அவர்களது பயன்பாட்டுக்கும் இந்த கலாச்சார மையம் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை சிறையில் ஒரு மீனவர்கள் கூட இல்லை. மீனவர்களின் படகுகளை விடுப்பது சம்பந்தமாக நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நானும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியுள்ளோம். இரு நாடுகளின் அமைச்சர்கள் அளவில் இந்த கூட்டம் நடைபெற வேண்டியது. அந்த கூட்டம் கூடிய விரைவில் நடைபெற உள்ளது. இவை அனைத்திற்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்படும். பசுக்கள் அரவணைப்பு என்பது விலங்குகள் நலவாரியம் என்கிற தன்னிச்சையான அமைப்பு கொடுத்த அறிவிப்பு... நன்றி” என்றார்.