
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் 18 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்கள் வேட்பாளரை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளர்களும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், இன்று ஈரோடு கிழக்கில் பிரச்சாரத்திற்கு நடுவே செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், ''நேற்று கமல்ஹாசன் வாக்கு கேட்டு வந்துள்ளார். எதற்காக இந்த கூட்டணியை ஆதரிக்கிறேன் என்றால், இன்னைக்கு நாடு பாதுகாப்பற்ற தன்மையில் இருக்கிறது. எனவே, இதை மாற்றுவதற்காக வந்திருக்கிறேன் என்று கமல்ஹாசன் சொல்கிறார். நான் கேட்கிறேன், உங்களுக்கே தெரியும் இந்த நாட்டில் பதற்றமான சூழ்நிலை இருக்கிறதா? இந்த ஒரு தேர்தலால் பெரிய மாற்றம் வந்துவிடப் போகிறதா? ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக கமல்ஹாசன் பேசியிருக்கிறார் என்பதை தான் இந்த நேரத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
கமல்ஹாசன் பேசும்போது கூட்டம் கூடியது என்பதாக பத்திரிகைகளில் போடுகிறார்கள். அவரை பார்ப்பதற்காக தான் வந்திருப்பார்களே தவிர இது எல்லாம் ஓட்டாக மாறாது. முந்தானை முடிச்சு படத்தில் நடித்த தவக்களை என்ற நடிகர் இருக்கிறார். மிகவும் குள்ளமாக இருக்கும் நடிகர் அவர். அவரை கூட்டிக்கொண்டு போய் நாங்கள் ஓட்டு கேட்டோம். மாடியிலும், தெருவிலும் என எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாகப் பார்த்தார்கள். பார்த்தார்களே ஒழிய ஓட்டு போடவில்லை. போன தடவை குஷ்பு கூட வந்து ஓட்டு கேட்டார்கள். ஓட்டு போட்டாங்களா? எங்கள் மண்ணின் மைந்தர் வைகைபுயல் வடிவேலு கூட திமுகவிற்கு ஓட்டு கேட்டார். ஓட்டு போட்டுவிட்டார்களா? கூட்டம் கூடும். ஆனால், ஓட்டு போடமாட்டார்கள். அதிலும் ஈரோட்டு மக்கள் மிகவும் விவரமானவர்கள். எதையும் ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள்'' என்றார்.