தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று துவங்கியுள்ளது. ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதிமுகவின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்றனர். அதிமுகவில் பொதுக்குழு வழக்கு, மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இரட்டைத் தலைமையைக் குறிப்பிட்ட கடிதம் போன்ற உட்கட்சிப் பிரச்சனைகள் பூதாகரமாக உலாவி வரும் சூழலில் அவர்கள் அருகருகே அமர்ந்திருந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தலைமையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு நாளை சட்டமன்ற சபாநாயகரைச் சந்திக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று நடைபெற்ற அதிமுக இபிஎஸ் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், நாளை காலை 9.15 மணிக்கு சட்டப்பேரவை சபாநாயகரைச் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்தது குறித்து சபாநாயகரிடம் முறையிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.