""ஹலோ தலைவரே, ’காலனி’ என்னும் சொல்லே இனி கூடாது என்கிற முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.''’’

""ஆமாம்பா, இதை ஒட்டுமொத்த தமிழகமும் மனமுவந்து பாராட்டுகிறதே.''’’

""உண்மைதாங்க தலைவரே, தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதிநாளான 29ஆம் தேதி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "ஆதிகுடிகளை இழிவு படுத்தும் அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த "காலனி' என்ற சொல், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி யிருப்பதால், அதை அரசு ஆவணங்களிலிருந்தும், புழக்கத்திலிருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அறிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று, ஸ்டாலின் செய்திருக்கும் இந்த அறிவிப்பை, புரட்சிகரமான சுயமரியாதை நடவடிக்கைன்னு பல்வேறு தரப்பினரும் மகிழ்வோடு பாராட்டறாங்க. ஏற்கனவே, அரசு போக்குவரத்து கழகங்களிலும், மாவட்ட தலைநகரின் பெயர்களிலும், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களிலும் ஒட்டிக்கொண்டிருந்த சாதிப் பெயர்களை, அன்றைய முதல்வர் கலைஞர் ஒழித்தார். அவரது மகனான இன்றைய முதல்வர், காலனி என்னும் இழிவையே ஒழிக்கிறார்னு எல்லோரும் பூரிப்போடு வாழ்த்தறாங்க. அவரது இந்த துணிச்சலான அறிவிப்பை, தேசியத் தலைவர்களும் கூர்ந்து கவனிக்கிறாங்களாம்.''’’

""புரட்சிக்கவிஞர் பாரதிதாசனை சிறப்பிக்கும் திட்டங்களையும் ஸ்டாலின் அறிவித்திருக் கிறாரே?''’’

ss

""நானே இதுபற்றிச் சொல்லணும்னு நினைச்சேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் 134ஆவது பிறந்த நாள், ஏப்ரல் 29 அன்று வந்ததைத் தொடர்ந்து, அவரைச் சிறப்பிக்கும் வகையில் அந்த நாளில் இருந்து, மே 5 வரையிலான ஒருவார காலம், ஆண்டுதோறும் ‘தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து, தமிழ் உணர்வாளர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார். மேலும், வருடம் தோறும் தமிழ்மொழியில் சிறந்த படைப்புகளைத் தரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களில் ஒருவருக்கு ’வளரும் இளம் படைப் பாளர் விருது’ வழங்கப்படும் என்றும் அறிவித்திருக் கிறார். இது பாவேந்தரின் அபிமானிகளையும், தமிழ் உணர்வாளர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்திருக்கிறது. இதையொட்டி பாரதிதாசன் மகள்வழிப் பேரன் வீரமணி பாரதிதாசன், அவரது துணைவியார் மற்றும் புகழ்வடிவு, சங்கத்தமிழ், ஆதித்யன், கார்த்திகாயினி, அஸ்வின், செரின் உள் ளிட்ட பாரதிதாசன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். ஸ்டாலினின் அறிவிப்பைத் தொடர்ந்து. தமிழகம் முழுதும் தமிழ் வார விழா இலக்கிய மணம் கமழக் கொண்டாடப்பட்டு வருகிறது.''’’

Advertisment

""சரிப்பா... செந்தில்பாலாஜி தரப்பு, அமைச்சர் பதவியை மறுபடியும் வாங்காம ஓயமாட்டோம்னு வரிஞ்சுகட்டி நிற்குதே?''’’

ss

Advertisment

""ஆமாங்க தலைவரே, ஒரு வருடத்துக்கு மேல சிறைவாசம் அனுபவிச்ச நிலையிலும் தனது அமைச்சர் பதவிக்கு அமலாக்கத்துறை ஆப்பு வைத்துவிட்டதை, செந்தில்பாலாஜியால் ஜீரணிச்சிக்க முடியலையாம். அமலாக்கத்துறையின் விருப்பத்துக்கு இசைவாக, அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமீன் வேண்டுமா?ன்னு உச்சநீதி மன்றம் கெடுபிடியா நின்னதால், வேறு வழியில்லா மல் ஜாமீனை டிக் பண்ணவேண்டிய சூழலுக்கு ஆளானார் செந்தில்பாலாஜி. இதில் குறிப்பாக, இவர் தொடர்பான ஜாமீன் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் அந்த அமர்வில் இடம் பெற்றி ருந்த நீதிபதிகளில் ஒருவரான அபய் எஸ். ஓகாதான், இப்படியொரு நெருக்கடியை தனக்கு உருவாக்கி விட்டதாக செந்தில் தரப்பு கருதுகிறது. அதனால், அவர் வழக்கைக் கையாண்ட முறையை எதிர்த்து, மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தவும், அதில் வெற்றிபெற்று மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவும், செந்தில் பாலாஜி துடிக்கிறாராம். இது போன்ற வழக்குகளில் சிக்கிய சிலர், தங்கள் பதவிகளில் தொடர்வதை எல்லாம் சுட்டிக்காட்டி வாதாட, தி.மு.க. தரப்பு வழக்கறிஞர்களும் ரெடியா யிட்டாங்களாம்.''’’

""தே.மு.தி.க.வில் அதிரடி மாற்றங்கள் நடந்திருக்கே. அதுக்கு என்ன காரணமாம்?''’’

dd

""விஜயகாந்த்தின் மறைவுக்குப் பிறகு, முதல்முறையாக தே.மு.தி.க.வின் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் கூட்டியிருந்தார் அக் கட்சியின் பொதுச்செயலாளரான பிரேமலதா. அனைத்து அரசியல் கட்சிகளும் வருடத்திற்கு 2 முறை தங்களின் பொதுக்குழுவைக் கூட்டி விவாதித்து, அதைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்பது விதி. அதன்படிதான் இப்போது பொதுக் குழு கூட்டப்பட்டிருக்கிறது. அதில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்தார் பிரேமலதா. பின்னர், கட்சியின் இளைஞரணி தலைவராக இருந்த பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷை, கட்சியின் பொருளாளராகவும், மகன் விஜயபிரபாகரனை, மாநில இளைஞரணிச் செயலாளராகவும் நியமிப்பதாக அறிவித் தார் பிரேமலதா. விஜயபிரபாகரனை இளைஞரணிக்கு கொண்டு வரவேண்டும் என்று, கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வந்த நிலையில்... அவருக்கு பொறுப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது. அவருக்கு மாவட்டம்தோறும் வரவேற்பு கொடுக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. அதேபோல், மறைந்த விஜயகாந்திற்கு மணிமண்டபம் அமைக்கவேண்டும் என்கிற கோரிக்கை மாநில அரசுக்கும், பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை ஒன்றிய அரசுக்கும் இதில் வைக்கப்பட்டிருக்கிறது.''’’

""பதவி இழந்த பா.ஜ.க. மாநில நிர்வாகி, இப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமெரிக்காவுக்குச் சென்றிருப்பதாக தகவல் பரப்பப்படுகிறதே?''’’

""இது சம்பந்தமாக கமலாலயத் தரப்பில் விசாரித்தபோது, ’இதெல்லாம் அந்த மாஜியின் கப்ஸா வேலைன்னு சொன்னவங்க, ’மாநிலத் தலைவர் பதவி பறிபோனதும், தன்னை ஆந்திராவிலிருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்கி, மத்திய மந்திரியாவும் ஆக்கிடுவாங்கன்னு, அமித்ஷா கொடுத்த வாக்குறுதியை அவர் நம்பிக்கிட்டிருந்தார். ஆனால், அமித்ஷா அவரைக் கண்டுக்கவே இல்லை. அதனால் அவரை, அவரோட நட்பு வட்டாரமே கிண்டல்பண்ண ஆரம்பிச்சிடுச்சி. இந்த நிலையில், ஆந்திராவில் காலியான ராஜ்யசபா பதவிக்கு, வெங்கட சத்யநாராயணா என்பவரை, அம்மாநில பா.ஜ.க. அறிவிச்சிடிச்சி. அதனால் ரொம்பவே அப்செட்டானவர், தனக்கு அமெரிக்காவில் சில நிகழ்ச்சிகள் இருப்பதாகச் சொல்லிவிட்டு, இங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். அங்கே ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் வழக்கமாக நடந்துவரும், நிகழ்ச்சிகளில் தானாகப் போய்த் தலையைக் காட்டிவருகிறாராம்.''’’

""நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர் வாகிகள் மத்தியில் கொந்தளிப்பு தெரி யுதே?''’’

""அண்மையில் அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட் டத்தில், அரசியல் அமைப்பைக் காப்பாற்றுவோம் என்கிற பிரச்சாரத்தை, நாடு முழுக்க நடத்துவதுன்னு தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்திலும் அந்தப் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்காக, மாவட்டம்தோறும் அதற்கான பொறுப்பாளர்களை, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை நியமித்தார். ஆனால், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் மர்மமாக மரணமடைந்த விவகாரத்தாலும், அதுகுறித்த விசாரணை நடந்து வருவதாலும், இங்க மட்டும் அதற்கான பொறுப்பாளர்கள் முறைப்படி நியமிக்கப்படவில்லை. அதேசமயம், இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பணியை, கட்சியின் மாநில பொருளாளரும் நாங்குனேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரனிடம் அவர் ஒப்படைச்சிட்டார். இதுதான் அந்த மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளைக் கொதிப்படைய வச்சிருக்கு. அதோட, ஜெயக்குமார் மரண சம்பவம் அரங்கேறி, வரும் மே 4ஆம் தேதியோடு, ஒரு வருடம் நிறைவடையப்போகுது. இந்த நிலையிலும், குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் படாதது, அவர்களைக் கடும் எரிச்சலில் ஆழ்த்தியிருக்கு.''’’

""தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் குறித்து தீவிரமாக விசாரிக்கிறாங்களே?''’’

’""பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, விசா காலம் முடிந்த பின்பும், சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினரை வெளியேற்றும் நடவடிக்கை நாடு முழுக்க எடுக்கப்பட்டது. அதற்கான காலக்கெடுவும் 29ஆம் தேதி யோடு முடிவடைஞ்சிடிச்சி. இருந்தும், இன்னும் யாரேனும் சட்டவிரோதமாக தமி ழகத்தில் தங்கியிருக் காங்களா?ன்னு போலீஸ் துழாவுது. இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார், உயரதிகாரிகளோடு ஆலோ சனை நடத்தினார். அதில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் ஆசீர்வாதம் உட்பட, க்யூ பிராஞ்ச் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளும், மாநில உளவுத்துறையினரும் கூட கலந்துக்கிட்டாங்க. அப்போது, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கியிருந்தால், அவர்களைக் கண்டறிந்து வெளியேற்றுவது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கு. அதனால் போலீஸ் அங்கங்கே சலிக்க ஆரம்பிச்சிடிச்சி.''’’

""ஜகபர்அலி கொலையில் ஒரு காவல்துறை உயர் அதிகாரியும் சிக்கியிருக்காராமே?''

""ஆமாங்க தலைவரே, கனிம வளக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடியதால், புதுக்கோட்டை அ.தி.மு.க. பிரமுகர் ஜகபர்அலி, ஜனவரி 17ஆம் தேதி கனிமவளக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதில் கிரஷர் அதிபர்கள் ராசு, ராமையா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில், கனிமவளக் கொள்ளை யர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் தற்போது சில காக்கிகள் கனிமக் கொள்ளையர்களுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப் பட்டுள்ளது. அதாவது ராமையா, ராசு ஆகியோர் கைதுசெய்யப் படும்போது, மாவட்ட தலைமை யிடத்து காக்கி அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க... அவரோ மற்றொரு காக்கி மூலமாக, கனிமக் கொள்ளையர்களின் செல்போன் கால்-ஹிஸ்டரியில் பதிவாகியிருந்த தனது எண்களை அழிக்கச் செய்திருக்கிறார். இவ் விவகாரம் விசாரணை அதிகாரிக்கு தெரியவர, தீவிரமாக விசாரித்ததில், சம்பந்தப்பட்ட தலைமையிடத்து காக்கியின் எண்கள், பல மணல் கொள்ளையர்களுடன் தொடர்பி லிருப்பது தெரிந்ததால், அவரை இடமாற்றம் செய்ததோடு, விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப் பட்டுள்ளதாம். அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று ஜகபர் அலி கொலைக்கு நியாயம் கேட்கும் சமூக ஆர்வலர்கள் அடுத்தகட்டப் போராட்டத்துக்கு தயாராகிவருகிறார்களாம்''

""டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் அலுவலர் கணேசன் பற்றி கடந்த முறை நாம் பேசிய நிலையில், அந்தச் செய்தி பெரும் பரபரப்பை கோட்டைவரை ஏற்படுத்தியிருக்கு. இந்த நிலையில், அந்த கணேசன், அதிகாரிகள் சிலரின் உதவியோடு அங்கே நடத்தியிருக்கும் பர்ச்சேஸ் ஊழல்கள் பற்றி தமிழ் நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றிருக்கின்றன. எனினும், இந்த ஊழல் விவ காரத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்ட லஞ்சஒழிப்புத் துறையினர், மேல்நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருகிறார்களாம்.''’’

_______

இறுதிச் சுற்று!

ss

உலகம் முழுவதும் தொழிலாளர்களின் உழைப்பையும், உரிமைகளையும் அங்கீகரித்துப் பாதுகாப்பதற்காக, மே 1-ந் தேதியன்று "சர்வதேச தொழிலாளர்கள் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வியாழக்கிழமை (மே 1ஆம் தேதி) சென்னை சிந்தாதிரிப் பேட்டையிலுள்ள "மே தின பூங்கா' நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொழிலாளர்களின் நண்பன் என்பதையும், அவர்களின் தோளோடு தோள் நின்று கடமையாற்றுவேன் என்பதையும் சொல்லும் வகையில் செஞ்சட்டை அணிந்து செவ்வணக்கம் செலுத்தினார் ஸ்டாலின். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொழிற்சங்கத்தினரும் மரியாதை செலுத்தினர். மே தினத்தையொட்டி, மே தின பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது.

-இளையர்