நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் படு ஸ்பீடாக இருந்துவந்த உதயநிதி ஸ்டாலின் கடைசிநாள் பிரச்சாரத்தை மயிலாடுதுறை தொகுதியில் முடித்திருக்கிறார்.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செ. ராமலிங்கத்தை ஆதரித்து மயிலாடுதுறை சின்ன கடைத்தெருவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் உதயநிதி ஸ்டாலின். அப்போது பேசுகையில், "கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடி மக்களின் வரிப்பணம் ரூபாய் 5 ஆயிரம் கோடியை செலவு செய்து 50 நாடுகளை சுற்றிவிட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு அப்பாவி மக்களை நடுத்தெருவில் பரிதவிக்க வைத்துவிட்டு கார்ப்பரேட்களுக்கு கைகூலியைபோல் ஆட்சி நடத்தி வருகிறார் நரேந்திரமோடி. நான் கடந்த 25 நாட்களாக அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்துவருகிறேன். இன்று கடைசி நாள் பிரச்சாரம் எனது தாய் பிறந்த தாய்மண்ணில் வாக்கு கேட்க வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் என் உறவுகள், மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அந்த இடத்தில் ராகுல் காந்தியை அரியணையில் அமரவைக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நீங்களும் முடிவுசெய்துவிட்டீர்கள்.
தூத்துக்குடி போராட்டத்தில் 13 அப்பாவிகளை சுட்டுக் கொன்றுவிட்டு கூட்டம் கூடியதால் சுட்டதாக கூறுகிறது அதிமுக ஆட்சி. மருத்துவ கனவுகளுடன் உள்ள தமிழக மாணவர்களை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியது பாஜக ஆட்சி. அதற்கு துணை நின்றது அதிமுக அரசு. வருகிற ஏப்ரல் 18 மோடிக்கு கெட்டவுட் என்று கூறிட மக்கள் முடிவு செய்துவிட்டனர்.
நீட் தேர்வு ரத்து, விவசாயக்கடன், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ள திமுக கூட்டணிக்கு வாய்ப்பளியுங்கள். கஜா புயல், ஒக்கி புயல், வர்தா புயல் என எந்த பாதிப்பின்போதும் தமிழ்நாட்டுக்கு வராத மோடி தேர்தலின்போது மட்டுமே வந்து போகிறார். நரேந்திர மோடியின் அடியாட்களாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளனர். முதலமைச்சர் பதவியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் இரண்டு ஆண்டுகளாக முதலமைச்சராக இருப்பதே சாதனைதான் என்கிறார் எடப்பாடி. ஜெயலலிதா எப்படி இறந்தார் என்பது யாருக்கும் தெரியாது அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று சொன்னவர் தற்போது பதவிக்காக வாய்மூடியாக இருக்கிறார். முதலமைச்சருக்கே பாதுகாப்பில்லாத ஆட்சியாக அதிமுக ஆட்சி உள்ளது. நீங்கள் அளிக்கும் வாக்கு மூலம் நரேந்திர மோடியை மட்டுமின்றி எடப்பாடி ஓ.பி.எஸ்.யும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்" என்று பேசினார்.