தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நேற்று இரண்டாவது நாளாக துணை முதல்வர் ஓ.பி.எஸ்-சை கொங்கு மண்டலம் காங்கயம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வி தலைமையில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் இடையே உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் தான் சென்னையில் இருந்து ஓ.பி.எஸ் கடந்த 2ஆம் தேதி பெரியகுளம் வந்தார். நேற்று முன்தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்தார். அன்று இரவு அமைச்சர் உதயகுமார் தலைமையில் 6 எம்.எல்.ஏ.க்கள் சந்தித்துவிட்டு சென்றனர். நேற்று காலை மூக்கையாத் தேவர் சிலை அமைப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் உடன் எம்.பி ரவீந்திரநாத் குமாரும் உசிலம்பட்டிக்கு சென்றபோது கட்சிகாரர்கள் மற்றும் உசிலம்பட்டியை சேர்ந்த பொதுமக்களும் பெரும் திரளாக ரோட்டின் இருபுறமும் நின்று ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்று மரியாதை செய்ததை கண்டு பிரமித்து போய்விட்டார்.
அதன்பின் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே மூக்கையாத் தேவர் சிலை வைப்பதற்கான இடத்தையும் ஆய்வு செய்துவிட்டு அதன் அருகே உள்ள டீக்கடைக்கு கட்சிக்காரர்களுடன் சென்று அங்குள்ள சேரில் உட்கார்ந்து டீ குடித்து விட்டு அப்பகுதியில் உள்ள மக்களிடம் நலம் விசாரித்து விட்டு பெரியகுளம் திரும்பினார். அப்போது கொங்கு மண்டலம் காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ செல்வி, திருப்பூர் வடக்கு தொகுதி பாசறை செயலாளர் சந்திர சேகர் பாசறை, துணை தலைவர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அதுபோல் முதுகுளத்தூர் ஒன்றிய தலைவர் சிவகங்கை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர், துணை செயலாளர் ஆசைத்தம்பி, அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ மணிமேகலை, திருப்போரூர் ஒன்றிய தலைவர் சங்கீதா, தாராபுரம் நகராட்சி முன்னாள் தலைவர் கோவிந்தராஜ் உள்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதியிலிருந்து வந்த கட்சி பொறுப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை அந்தித்து பேசினர்.
இப்படி ஓபிஎஸ் உடன் பேசவந்த பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்ட போது; முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், அப்படிபட்டவர்தான் முதல்வர் வேட்பாளராகவும் பொது செயலாளராகவும் பதவி வகிக்க வேண்டும் அப்போதுதான் சட்டசபை தேர்தலில் முழுமையான வெற்றி பெற முடியும் என்று கூறினார்கள்.