Skip to main content

முதலமைச்சர், அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்... ஈஸ்வரன் வேண்டுகோள்!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

eps

 

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அத்தியாவசியமற்ற நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டும். மாவட்டங்களில் கரோனா கட்டுக்கடங்காமல் பரவ காரணமாகிவிடும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவி கொண்டிருப்பது வேதனைஅளிக்கிறது. நான்கு அமைச்சர்களுக்கும் அவர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் அந்தத் தொடர்பில் குறைந்தபட்சம் 4,000 அதிகாரிகளுக்கும் கரோனா நோய்த் தொற்று பரவியிருக்கிறது. தனிமனித இடைவெளி ஒன்று தான் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதை அனைவரும் அறிவோம். தமிழக முதலமைச்சருடைய வேண்டுகோளும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் அதைத்தான் அறிவிக்கிறது. 

 

தமிழக அரசினுடைய வேண்டுகோளை ஏற்று பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுமே மக்கள் கூடுகின்ற நிகழ்வை முழுமையாகத் தவிர்த்து இருக்கிறார்கள். முதலமைச்சரும், தமிழக அமைச்சர்களும் மாவட்ட நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார்கள். அடிக்கல் நாட்டுவதும், திட்டத்தைத் துவக்குவதுமாகவும் இருக்கிறது. இவை அனைத்துமே தவிர்க்கக் கூடியவை. 

 

தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்ற பின்னால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி வந்திருக்கிறது. கிராமப்புறங்களில் அந்த நிதியின் மூலமாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ஆங்காங்கு இருக்கின்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் களமிறங்கி இருக்கிறார்கள். அனைத்துத் திட்டங்களையுமே அமைச்சர்கள் தான் துவங்கி வைக்க வேண்டுமென்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. 

 

இதுபோன்று ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு நாளும் 20 திட்டங்களுக்கு மேல் 20 இடங்களில் துவக்கி வைக்கின்ற நிகழ்வுகளை நடத்துகிறார்கள். அமைச்சர்கள் வருகிறார்கள் என்றால் அதிகமாகக் கூட்டம் கூடிவிடுகிறது. தனிமனித இடைவெளி எங்குமே கடைப்பிடிக்கப்படுவதில்லை. பெண்களை அதிகமாகக் கூட வைத்து ஆரத்தி எடுக்க வைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் தினசரி ஒளிபரப்பப்படுவதை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். 

 

இதனால் தான் அமைச்சர்களுக்கு கரோனா தொற்று பரவுகிறது. அந்த நிகழ்வுகளில் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பல அதிகாரிகள் வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான அதிகாரிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் இதன் மூலம் தொற்று ஏற்பட்டிருக்கிறது. 

 

http://onelink.to/nknapp

 

நோய்த் தொற்று பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் கரோனா பாதுகாப்புப் பணிகள் தவிர மீதி எந்தப் பணிகளிலும் முதலமைச்சரும், அமைச்சர்களும் ஈடுபடாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தமிழக முதலமைச்சர் அத்தியாவசியமற்ற பணிகளில் யாரும் கலந்துகொள்ள கூடாது என்று உத்தரவிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியின் மூலம் நடைபெறுகின்ற திட்டங்கள் துவக்குகின்ற நிகழ்ச்சியை அமைச்சர்களுக்காகக் காத்திருக்காமல் அந்தந்த உள்ளாட்சி பிரதிநிதிகளே துவக்கி வைக்க அறிவுறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்