
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதே சமயம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவதற்கு தற்போதைய தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் தான் காரணம் என அ.தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, பா.ஜ.க.வின் தற்போதைய மாநில தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கு அடுத்த நாளே டெல்லியில் முகாமிட்டனர். இதனால் தமிழக பா.ஜ.க. தலைவர் விரைவில் மாற்றப்படுவார் எனச் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணிக்கு வசதியாகத் தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அடுத்த தமிழக பா.ஜ.க. தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நாளை (10.04.2025) தமிழகம் வருகிறார். இதற்காக நாளை இரவு சுமார் 07.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்படும் அமித்ஷா இரவு 10.20 மணிக்குச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.
அதன்பிறகு அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (11.04.2025) பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்பிறகு மாலை 6 மணிக்குச் சென்னையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்லும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அ.தி.மு.க. தலைவர்கள் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தமிழக பா.ஜ.க.விற்கு புதிய மாநில தலைவரை நியமித்து அதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே சமயம் தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 5 நாட்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அதிமுக முக்கிய நிர்வாகிகளைச் சென்னையில் இருக்கும்படி எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்களான கே.ஏ. செங்கோட்டையன், தங்கமணி ஆகிய இருவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே செங்கோட்டையன் டெல்லிக்குச் சென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.