கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் கொடநாடு விவகாரம் எடப்பாடியைக் கலவரப்படுத்தும் வகையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெ.வின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை விவகாரத்தில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் விபத்தில் இறந்து போனார். அடுத்து கொட நாட்டுக் குற்றவாளிகளில் ஒருவரான சயான், தன் குடும்பத்தோடு காரில் போகும் போது, ஒரு டேங்கர் லாரி மோதியதில், அவரது மனைவி வினுப்பிரியாவும், மகள் நீதுவும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். சயான் காயங்களோடு உயிர் பிழைத்தார்.
அவர் கொடநாட்டுச் சம்பவத்துக்குக் காரணமானவர் தமிழக முதல்வர் எடப்பாடிதான் என்று பகிரங்கமாகவே வாக்குமூலம் கொடுக்க, அதைத் தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தில் தமிழக அரசால் கைது செய்யப்பட்டு, அண்மையில் விடுவிக்கப்பட்டார். அவர் மனைவியும் மகளும் கொல்லப்பட்ட வழக்குதான் இப்போது கேரள உயர்நீதி மன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. இதில் ஆஜரான சயான் தரப்பு, கொடநாட்டில் நடந்த அத்தனைக்கும் காரணமானவர் தமிழக முதல்வர் எடப்பாடிதான் நாங்கள் சந்தித்த விபத்துக்கும் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று அழுத்தமான வாதங்களை வைத்தது, இங்குள்ள கோட்டை வட்டாரத்தை பதட்டப்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.