கரோனா என்ற இந்த கொடிய காலத்தில் அன்றாடம் உழைத்து பிழைக்கும் ஏழைகள் முதல், சிறு, குறு தொழில் புரிவோர், தனியார் துறைகளில் பணிபுரியும் நடுத்தர வர்க்க குடும்பத்தினர் முதல் வறுமை, குடும்ப கஷ்டம், கடன் சுமை என வாழ்வியல் போராட்டம் இப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசின் மின்சார வாரியம் ஏற்கனவே முந்தைய மாதங்களில் பொதுமக்கள் அவர்களில் வீடுகளில் பயன்படுத்திய மின் அளவை கணக்கிட்டு அதை செலுத்துமாறு மக்களிடம் திணித்துள்ளது. அதேபோல் சிறு, குறு தொழில் புரியும் உற்பத்தியாளர்களையும் மின் கட்டணம் செலுத்துமாறு நிர்பந்தித்துள்ளது. இந்த கொடிய வைரஸ் தொற்று காலத்தில் ஏற்கனவே பொருளாதார சுமையால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு மின் கட்டணம் அதிக பாரமாக அவர்கள் தலையில் ஏறி உள்ளது. இது பொதுமக்களுக்கு செய்யும் துரோகம் என தமிழக அரசை கண்டித்து எதிர்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து கண்டனக்குரல் எழுப்பி வந்தது.
மேலும் மின்கட்டணத்தில் பல குளறுபடிகள் உள்ளது அவை சரி செய்யப்பட வேண்டும் முழுமையான கட்டனத்தை கட்ட நிர்பந்தம் செய்யக்கூடாது. மற்ற மாநிலங்களில் 25 சதவீதம் குறைத்துள்ளதுபோல், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததோடு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, இன்று 21 ந் தேதி தமிழகம் முழுக்க தி.மு.க.வினர் தங்கள் இல்லங்களில் கருப்புக்கொடி ஏற்றி வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தி.மு.க. தலைமை அறிவித்தது.
ஈரோட்டில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில், அவர் வீடு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல் திமுக மாநில துணை பொதுச்செயலாளர் முன்னாள் அமைச்சர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவரது மாணிக்கம்பாளையம் இல்லம் முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல திமுக மாநில மற்றொரு துணை பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அவர் இல்லத்தின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி கோஷங்களை எழுப்பினார். ஈரோடு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பவானியில் கட்சியினருடன் சேர்ந்து கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
அதேபோல் ஈரோடு திமுகவினர் பலரும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மின்கட்டணத்தை மக்கள் தலையில் சுமத்தாதே... ரத்து செய் ரத்து செய் மின் கட்டணத்தை ரத்து செய்... என கோஷமிட்டனர்.
இதேபோல் தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் தங்களது வீடுகள் முன்பு நின்று கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.