ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பை எட்டியுள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபொழுது ஆங்காங்கு அமைச்சர்கள் தினந்தோறும் கிடா விருந்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. 20 அமைச்சர்களை இங்கு கொண்டு வந்து இறக்கி உள்ளார்கள். இருந்தாலும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிதான் இடைத் தேர்தலில் போட்டியிடுகிறது. அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இந்த பயமே நம் வெற்றிக்கு அறிகுறி. 20 அமைச்சர்களும் வீடு வீடாகச் சென்று ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை கொடுத்துக் கொண்டு உள்ளார்கள். எத்தனை ஆயிரம் கொடுத்தாலும் மக்களுக்கு இரட்டை இலை தான் தேர்தல் நேரத்தில் கண்ணில் படும்.
நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் பணம். ஏதாவது ஒரு வழியில் உங்கள் பணம் உங்களை வந்து சேருகிறது. அனைத்து துறைகளும் இன்று சீரழிந்துவிட்டது. எந்த துறைகளிலும் இன்று நன்மை கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை இன்று நிறைவேற்றி முதல்வர் ரிப்பன் வெட்டிக்கொண்டிருக்கிறார். அதிமுக பெற்றெடுத்த குழந்தைக்கு திமுக பெயர் வைத்துக் கொண்டிருக்கிறது.” என்றார்.