Skip to main content

'வாய்ப்பை இழக்கக் கூடாது:குதிரைகள் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பானது இது'-பாமக அன்புமணி வலியுறுத்தல்!

Published on 03/06/2022 | Edited on 03/06/2022

 

'Do not miss the opportunity: it's like locking the stable after the horses have escaped' - Pmk Anbumani insists!

 

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிப்பதாக பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அரசு பள்ளிகள் வரும் 13-ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படாதது கவலையளிக்கிறது.தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை  தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தாமதப்படுத்துவது, அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தும்.

 

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏப்ரல் மாத இறுதியிலோ, மே மாதத்தின்  தொடக்கத்திலோ மாணவர் சேர்க்கை தொடங்குவது வழக்கம். ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்பதால், மே மாதத்தில் மாணவர் சேர்க்கையைத் தொடங்குவது தான் அவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள், ஆசிரியர் தேவைகள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும். கடந்த ஆண்டு மே மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போதும் கூட, மாணவர் சேர்க்கை மே மாதத்தில் தொடங்கி விட்டது. ஆனால், இப்போது கொரோனா பரவல் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காததற்காக காரணங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

 

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 13-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 27-ஆம் தேதியும் அரசு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள். இவற்றில் 11-ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கு இன்னும் 5 வேலை நாட்களில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அவற்றுக்கு மாணவர் சேர்க்கையை இன்னும் தொடங்காமல் இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாணவர் சேர்க்கை உடனே தொடங்கப்பட வேண்டும்.

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மே மாதத்தில் தான் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், அதை தனியார் பள்ளிகள் மதிப்பதில்லை. தனியார் பள்ளிகளில் கடந்த டிசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. பெயர் பெற்ற பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சில மாதங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து விட்டன. மற்ற பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 25% இடங்களுக்கான மாணவர் சேர்க்கையும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றன.

 

கரோனா பரவல் காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பல பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாற்றினார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் அரசு பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தொழில் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர் மத்தியில் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு மே மாதத் தொடக்கத்தில்  அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்கியிருந்தால், நடப்பாண்டும் வழக்கத்தை விட கூடுதலாக பல லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பர். அந்த வாய்ப்பை அரசு பள்ளிகளில் இழந்து கொண்டிருக்கின்றன.

 

தமிழ்நாட்டில் 22 அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை; 11 பள்ளிகளில் தலா ஒரு மாணவர் மட்டுமே படிக்கிறார்; 24 பள்ளிகளில் தலா இருவர் மட்டுமே பயில்கின்றனர்; 41 பள்ளிகளில் தலா மூவரும், 50 பள்ளிகளில் தலா நால்வரும் மட்டுமே பயில்கின்றனர். மொத்தமாக 669 அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே மாணவர்கள் பயின்று வரும் நிலையில், மாணவர் சேர்க்கையை தீவிரப் படுத்த வேண்டியிருக்கிறது. அதற்காக மாணவர் சேர்க்கையை முன்பே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், ஜுன் 13-ஆம் தேதி பள்ளிக்கூடங்கள் திறந்த பிறகு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்பதும், ஜூன் 14-ஆம் தேதி மாணவர் சேர்க்கைப் பேரணியை நடத்த வேண்டும் என்று ஆணையிடுவதும்  குதிரைகள் அனைத்தும் தப்பிச் சென்ற பிறகு லாயத்தை பூட்டுவதற்கு ஒப்பான அபத்தச் செயலாகும். இது அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பதிலாக குறைப்பதற்கே வழி வகுக்கும்.

 

எனவே, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்த விஷயத்தில் இனியும் தாமதிக்காமல் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் வீடு வீடாகச் சென்று தகுதியுள்ள குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை ஒரு நடைமுறையாக கருதாமல், பெரும் இயக்கமாக மாற்றுவதற்கு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.