கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில், அங்கு இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இன்று பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம், பல்லாரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜகவுக்காக வாக்கு சேகரித்து பேசினார். அப்போது, “எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை தலைமையிலான இரட்டை என்ஜின் அரசாங்கத்திற்கு மூன்றரை ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கர்நாடகாவின் வளர்ச்சிக்குப் பதிலாக ஊழலுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தது. இதற்கு என்ன காரணம்? காங்கிரஸின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியே தனது அரசு டெல்லியில் இருந்து 100 பைசா அனுப்பியதாகவும், ஆனால் 15 பைசா மட்டுமே ஏழைகளுக்கு சென்றடைந்ததாகவும் கூறினார். ஒரு வகையில், காங்கிரஸ் 85% கமிஷன் உள்ள கட்சி என்பதை அவரே ஏற்றுக்கொண்டார்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் தலைவர்கள், ‘பாஜக ஆட்சியாளர்கள் கர்நாடகத்தில் எந்த திட்டத்திலும் 40% கமிஷனாக பெற்று ஊழல் செய்கிறார்கள்’ எனக் குற்றச்சாட்டை முன் வைத்திருந்த நிலையில், பிரதமர் மோடி காங்கிரஸ் 85% கமிஷன் உள்ள கட்சி எனக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.