Skip to main content

தி.மு.க.வை அச்சுறுத்த அ.தி.மு.க. அரசு நினைத்தால்... ஆர்.எஸ்.பாரதி கைது குறித்து எம்.பி கனிமொழி ஆவேசம்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

dmk

 


கடந்த பிப்ரவரி மாதம் தி.மு.க. அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி, கலைஞர் வாசகர் வட்ட விழாவில் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது அவர் நீதிபதிகள் நியமனம் தொடர்பாகத் தெரிவித்த கருத்துகள், தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதுதொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதில் ஆர்.எஸ்.பாரதி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது விட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.எஸ்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்குப் பின் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் வீட்டில் ஆர்.எஸ்.பாரதியை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார், ஜூன் 1- ஆம் தேதி வரை ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் அளித்து உத்தரவிட்டார். 
 


இந்த நிலையில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தூத்துக்குடி தி.மு.க. எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், தி.மு.க. அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் செய்த ஊழல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி, சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருவதால் காழ்ப்புணர்ச்சியோடு ஆர்.எஸ்.பாரதி அவர்களை அ.தி.மு.க. அரசு கைதுசெய்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தி.மு.க.வை அச்சுறுத்த அ.தி.மு.க. அரசு நினைத்தால், அது நடக்காது என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்