Skip to main content

சிதம்பரம் நகராட்சி அலுவலகக்தில் முறைகேடு! திமுக முற்றுகை ஆர்ப்பாட்டம்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
Image

 

சிதம்பரம் நகராட்சியில் நடைபெற்ற முறைகேட்டினைக் கண்டித்து திமுக முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தியுள்ளனர்.

 

சிதம்பரம் நகராட்சியில் ஒப்பந்ததாரருக்கு வைப்புத்தொகை ரூ. 10 லட்சம் கூடுதலாக வழங்கியதிற்கு தொடர்பில்லாத கடைநிலை ஊழியர் ஒருவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதை கண்டித்து, திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சிதம்பரம் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர் சண்முகம் என்பவரின் வைப்புத்தொகை ரூ.10 லட்சத்திற்கு பதில் கூடுதலாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது கணக்கு தனிக்கை ஆய்வு செய்யும்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அப்போது நகராட்சியில் தொழில் வரி எழுத்தராக இருந்த அசோக் என்பவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதனைக் கேட்ட அசோக் தபாலை வாங்க மறுத்துள்ளார். இதனையறிந்த முன்னாள் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், கே. வெங்கடேசன், பன்னீர், சி.கே ராஜன் சிதம்பரம் நகர திமுக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன், கொத்தங்குடி கிளை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட திமுகவினர் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 

Image

 

பின்னர் இதுகுறித்து சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷாவிடம் பணியிடை நீக்க நடவடிக்கையைத் திரும்ப பெறவேண்டும் என்று முறையிட்டனர். அவர் உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி இதுகுறித்து முடிவு செய்வதாக கூறியுள்ளார்.

 

இதுகுறித்து திமுக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜெம்ஸ். விஜயராகவன் கூறுகையில், “பணிச்சுமையின் காரணமாக அசோக் என்பவரின் உயர் அதிகாரி இவருக்கு வைப்புத்தொகை கொடுக்கலாம் என்று என்று ஒரு கடிதத்தை தயார் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கடிதத்தை மட்டும் இவர் எழுதியுள்ளார். அவர் இதற்கான கையொப்பம் இடவில்லை, அதற்கான பணியிலும் இல்லை. இந்த நிலையில் அவர் கடிதத்தை எழுதி கொடுத்தார் என்ற முறையில் சஸ்பெண்ட் செய்துள்ளது தவறானது. இதுகுறித்து ஆணையரிடம் முறையிட்டுள்ளோம். உயர் அதிகாரிகளிடம் பேசி முடிவு செய்வதாக கூறியுள்ளார். சரியான நடவடிக்கை இல்லையென்றால் ஆணையரை முற்றுயிட்டு போராட்டம் நடைபெறும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்