டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தி திவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது, இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என்று கூறியிருந்தார். இந்தி திணிப்பிற்கு இதற்கு பல மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்திலும் திமுக,மதிமுக,காங்கிரஸ், விசிக மற்றும் சில அரசியல் கட்சியினர் இந்தி திணிப்பை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பாக வரும் 20ஆம் தேதி போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசும் போது, அவர்கள் நினைப்பதுபோல் இது 1967 இல்லை. திமுக இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தொடங்கினால் நாங்கள் சும்மா இருக்கமாட்டோம், நாங்களும் போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார், இந்தி மொழியை ஆதரித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில் "ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம், ஹிந்தி எங்கள் உயிரடா" என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திக்கு ஆதரவாகவும், கொலை மிரட்டல் விடுத்தும் பேஸ்புக்கில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்ட பாஜக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நட்டாலம் சிவின்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யக் கோரி மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் திமுக இளைஞரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.