நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் திமுக மாபெரும் வெற்றி பெற்றது. திமுகவின் நாடாளுமன்றக் குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக கனிமொழியும், பொருளாளராக எஸ்.எஸ்.பழனிமாணிக்கமும் தேர்வு செய்யப்பட்டனர். திமுக மக்களவை கொறடாவாக முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா தேர்வு செய்யப்பட்டார். அதேபோன்று, திமுக மாநிலங்களவை குழு தலைவராக திருச்சி சிவாவும், கொறடாவாக டி.கே.எஸ். இளங்கோவனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரான டி.ஆர்.பாலுவுக்கு, இந்தமுறை டெல்லி பந்த் சாலையில் அரசாங்க வீடு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுகவின் டி.ஆர்.பாலுவோ, வாஸ்துப்படி இந்த வீடு எனக்கு சரியில்லை என்கிறார். அதோடு, எனக்கு வசதியாகவும் இல்லை. அதனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எனக்கு ஒதுக்கப்பட்ட ரெய்சீனா சாலை இல்லத்தையே ஒதுக்குங்கள் போதும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் அதுதான் ராசி என்றும் சொன்னதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவிடமும் வலியுறுத்தி இருக்கிறார். இதனையடுத்து டி.ஆர்.பாலு கேட்ட ராசியான வீடே அவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர்.