மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.1,295.76 கோடி மதிப்பில் முல்லை பெரியாறு அணை லோயர் கேம்பிலிருந்து மதுரைக்கு 125 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் வழியே குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து ரூ.30 கோடி மதிப்பில் புதிய மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. அரசு அறிவித்த திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம். தமிழகம் முழுதும் 76 கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்திவருகிறது. கூட்டு குடிநீர் திட்டத்தால் 7,600 எம்.எல்.டி குடிநீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தமிழகத்தில் புதிய திட்டங்களால் குடிநீர் பிரச்சனைகள் வராது.
மதுரையில் ரூ.974 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெறுகிறது. மதுரை சர்வதேச விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்காக தற்போதைய நான்கு வழிச்சாலை விமான நிலைய ஒடு தளத்திற்கு கீழே கீழ்பால சாலையாக அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
எதிர்கட்சிகளின் பார்வையில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தமிழக அரசை பாராட்ட எதிர்கட்சிகளுக்கு மனமில்லை. தமிழக அரசு மக்களுக்காக இரவு, பகலாக பணியாற்றி வருகிறது. துணை முதல்வர் திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரங்களை பெருக்கித் தருகிறார்.
ஒவ்வொரு அரசுத்துறையும் முத்திரை பதித்து வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் துவக்கப்படும். குடிமரமாத்து திட்டத்தால் மழை நீர் ஒன்று கூட வீணாகமல் சேமிக்கப்பட்டுவருகிறது. திட்டங்களை பார்க்காமல் தேர்தலுக்காக ஸ்டாலின் தினமும் அரசை வசைபாடி வருகிறார். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 313 அரசுப் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்து உள்ளனர்” என்று பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், “மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு. முதல்வர் மீது ஒரு குறையும் சொல்லமுடியாத அளவிற்கு ஆட்சி செய்கிறார்.
பூட்டிய அறைக்குள் இருந்து பேசுகிறார் ஸ்டாலின். ஜெயலலிதா, முல்லை பெரியாறு அணையை சட்ட ரீதியாக மீட்டார். திமுக ஆட்சியில் முல்லை பெரியாறு அணை பிரச்சனையை கலைஞர் முறையாக கையாலவில்லை. ஜெயலலிதா 7 ஆண்டுகள் போராடி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டார்.
மீத்தேன் திட்டத்திற்கு கையொப்பமிட்டவர் ஸ்டாலின். ஸ்டாலின் போலி நாடகம் மக்கள் மத்தியில் பலிக்காது. ஸ்டாலின் கனவு பலிக்காது. 2021ல் அதிமுக அரசுதான் வெற்றி பெறும்” என்று பேசினார்.