ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
அதிமுக கூட்டணிக் கட்சிகளைப் பொறுத்தவரை தமாகா மட்டுமே தற்போது அதிமுக இபிஎஸ் தரப்பை ஆதரிக்கிறது. பாஜக தனது ஆதரவை இன்னும் சொல்லாத நிலையில் மற்ற கட்சிகள் அதிமுகவை ஆதரிப்பதாக தற்போது வரை சொல்லவில்லை. இது குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனிடம் கேட்ட பொழுது இரட்டை இலைச் சின்னம் யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்கே ஆதரவு எனக் கூறியிருந்தார்.
மறுபுறம் ஓபிஎஸ் தரப்பு ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் நிச்சயம் தனது வேட்பாளரை அறிவிப்பார் என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் கூறியிருந்தார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவை பாஜக நாளை எடுக்க உள்ளது.
இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு குறித்து மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். அதன்படி நாளை மாலை 3 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.