சென்னை வேப்பேரியில் கரோனா பரவல் காரணமாக சித்தா மருத்துவ மையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், ''அம்மா மினி கிளினிக்கள் தொடங்கப்படும் பொழுதே ஒரு வருடத்திற்கு மட்டும்தான் எனத் தற்காலிக அமைப்பாகவே தொடங்கப்பட்டிருக்கிறது. தொடங்கப்பட்டபொழுது 1,820 மருத்துவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டனர். அந்த கிளினிக்கிற்கு செவிலியர்கள்கூட நியமனம் செய்யப்படவில்லை. அதேபோல் பயன்படுத்தப்பட்டு வந்த கட்டிடத்தில் பெயிண்ட் அடித்து ஒரு போர்டை வைத்து திறந்து வைத்தார்கள். இந்த மருத்துவர்கள் எல்லாம் ஏற்கனவே கரோனா இரண்டாவது அலையில் பயன்படுத்தப்பட்டார்கள். இப்பொழுதுகூட அவர்கள் மார்ச் 31 ஆம் தேதிவரை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு கரோனா தடுப்பு பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்'' என்றார்.
இந்நிலையில் அம்மா மினி கிளினிக் மூடல் தொடர்பான அறிவிப்புக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'ஏழை, எளிய மக்கள் கிராமப்புறங்களிலும், நகரப் பகுதிகளிலும், தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலேயே சிகிச்சை பெறுவதற்காக அம்மா மினி கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்திற்கு அம்மா அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்ற ஒரே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இத்திட்டம் இந்த விடியா அரசால் மூடப்படுகிறது என்ற அறிவிப்பு வன்மையான கண்டனத்திற்குரியது. ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதை இந்த விடியா அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.