திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
இன்று, திமுக பேச்சுவார்த்தை குழுவோடு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூட்டணியில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டு முறையான அறிவிப்பு வெளியானது. ஆனால் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தை நிறைவு செய்யாமல், நாளை நடைபெறும் அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசி முடிவெடுப்பதாகவும், அதன்பிறகு மீண்டும் திமுக குழுவுடன் பேசி முறையான அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
உண்மையில் என்ன நடந்தது என நாம் தோழர்களிடம் கேட்டபோது, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் தொகுதிகளை கேட்டுள்ளது. மேலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட கூடுதலாக ஒரு தொகுதியை தரவேண்டும் என கேட்டுள்ளது. அப்படி இல்லையென்றால் ஒரு ராஜ்ய சபா எம்.பி. சீட் வேண்டுமென்று திமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதாவது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்பார்ப்பு என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட கூடுதலான ஒரு இடம் வேண்டுமென்பதுதான். ஆனால் திமுக தலைமை இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா இரண்டு சீட் என்ற சமநிலைதான் எனக்கூறியிருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் என்பதெல்லாம் இப்போதைய ஒப்பந்தத்தில் பேசமுடியாது என்றும் தெளிவாக கூறியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியே நாளை நடைபெறும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசப்படுகிறது. தொடர்ந்து நாளை மாலை திமுக கூட்டணியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இரண்டு சீட் ஒதுக்கப்பட்டு அறிவிப்பு வெளிவர இருக்கிறது.