Skip to main content

பாமகவுடன் கூட்டணியில் இருப்பது குறித்து எல்.கே.சுதீஷ் பேச்சு...

Published on 17/01/2021 | Edited on 17/01/2021

 

dmdk sutheesh press meet

 

திருச்சிக்கு பயணம் மேற்கொண்ட தேமுதிக கழக துணைச் செயலாளர் திரு.எல்.கே.சுதீஷ்க்கு மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதன்பின் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு மணப்பாறையில் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் முல்லை.சந்திரசேகரின் மகள் காதணி விழாவில் கலந்து கொண்டார்.

 

அதன்பின் திருச்சி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெயராமனின் தந்தை மறைவையொட்டி திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று அவரது  உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

 

முன்னதாக மணப்பாறையில் விழாவை முடித்து விட்டுப் புறப்பட்ட சுதீஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கூட்டணியில் பாமகவிற்கு அளிக்கும் முக்கியத்துவம் தேமுதிகவிற்கு அளிக்கப்படுவதில்லை என்று கட்சி தொண்டர்களின் மனநிலை இருப்பதாகத் தெரிகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "பாமக கட்சியின் 20 சதவீத கோரிக்கைகளுக்கு தான் முக்கியத்துவம் அளித்து அதிமுகவினர் பேசினார்கள். அவர்களிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. பாமக கூட்டணியில் இருப்பது தங்களுக்கு எந்த நெருடலும் இல்லை" எனக் கூறினார். மேலும் தேமுதிக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தான் இருந்து வருவதாகவும், தமிழக முதல்வர் 234 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை மேற்கொள்வது போல் தேமுதிகவும் பரப்புரை மேற்கொள்ளும் என்றும், தொகுதிப் பங்கீடு குறித்து இருகட்சித் தலைவர்கள் தான் ஒன்று கூடிப் பேசி முடிவெடுப்பார்கள் என்றும் கூறினார். மேலும், இந்த முறை தேமுதிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கக் கேட்கப்படும் என்றும், மணப்பாறை தொகுதி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். 

 


 

சார்ந்த செய்திகள்