கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. இந்த தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகையில், ''நியாயமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. இன்றைக்கு முழுமையாக எடப்பாடி தலைமையில் அதிமுகவினுடைய தொண்டர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழுமையான ஆதரவுடன் இருக்கிறார்கள். இதற்கான நியாயமான தீர்ப்பை தான் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது. இன்று எங்களது தொண்டர்களுக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் இன்று மிகப்பெரிய தீபாவளி. சந்தோஷமாக இருக்கிறார்கள். கடந்த நான்கரை ஆண்டு காலம் அற்புதமான ஆட்சியை எடப்பாடி தந்தார். மீண்டும் எடப்பாடி முதலமைச்சராக வரவேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு அச்சாணியாக இந்த தீர்ப்பு இருக்கிறது.'' என்றார்.