
சென்னையில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (24-03-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “திருவாரூரில் நடைபெற்ற மிலாடி நபி விழாவில் தான் அண்ணாவும், கலைஞரும் முதலில் சந்தித்தனர். அண்ணாவையும், கலைஞரையும் இணைக்கும் பாலமாக இருந்தது இஸ்லாமிய சமூகம் தான். சிறுபான்மையினர் நல வாரியத்தை தொடங்கியவர் முத்தமிழஞர் கலைஞர். காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, இஸ்லாமியர்களுக்கு 3.5% உள்ஒதுக்கீடு கலைஞர் வழங்கினார். கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மிலாடி நபிக்கி விடுமுறை அறிவித்தார். ஆனால், அதை அதிமுக அரசு ரத்து செய்தது. கலைஞர் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்று மிலாடி நபிக்கு விடுமுறை அறிவித்தார்.
இஸ்லாமியர்களை பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போது, இஸ்லாமியர்களை காக்கும் அரணாக திமுக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தது திமுக. அந்த சட்டத்துக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதை ஆதரித்து வாக்களித்தது அதிமுக. மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. இந்த சட்டத்தால் ஒரு முஸ்லிம் கூட பாதிக்கப்பட மாட்டார் என்று இபிஎஸ் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, எந்த கூச்சமும் இல்லாமல் இஃப்தார் நோன்பில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். ஆபத்து வரும் போது இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, அந்த குற்ற உணர்ச்சியே இல்லாமல் இஃப்தார் நோன்பில் கலந்துகொள்கிறார்.
இன்றைக்கு கூட வக்பு வாரிய சட்ட மசோதா இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. சிறுபான்மையினர் மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பா.ஜ.க இந்த கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. அதையும், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து வருகிறது. ஒருவேளை அது சட்டமானால், ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.கவின் சதித் திட்டங்களை திமுக ஒருபோதும் அனுமதிக்காது. இஸ்லாமியர்களின் உரிமைகளை காக்கும் சகோதரர்களாக நாங்கள் எப்போதும் செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.