கரூர் கலெக்டராக இருப்பவர் அன்பழகன். இவரிடம் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் மிரட்டல் விடுப்பது குறித்து புகார் அளிக்க வக்கீல் செந்தில் என்பவர் சென்றார். இரவு 11 மணிக்கு வந்து புகார் அளித்தால் ஏற்க முடியாது. காலையில் வாருங்கள் என்று கலெக்டர் கூறியதாக தெரிகிறது. இது அவசரம் என்பதால் உடனடியாக மனுவை வாங்கிக் கொள்ளுங்கள் என்று திமுக தரப்பினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று பேட்டியளித்த கலெக்டர், கூட்டமாக வந்து தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது குறித்து கலெக்டர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை தொடர்பு கொண்டு பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் கலெக்டர் தேர்தலை ரத்து செய்ய பரிந்துரை செய்வேன் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் சார்பில் கரூர் தொகுதி தேர்தல் அதிகாரியான கலெக்டர் அன்பழகன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். திமுக-காங்கிரஸ் நிர்வாகிகள் தனக்கு மிரட்டல் விடுத்திருப்பதாக கரூர் ஆட்சியர் அன்பழகன் அளித்த புகாரில் உள்நோக்கம் உள்ளது. எனவே இது குறித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமை மூலம், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது.