விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் அதிருப்தியை பல தரப்பிலும் ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் சீமான் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு சீமான் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர்.
இந்நிலையில் விஜய பாரத மக்கள் கட்சி என்கிற கட்சியின் சார்பிலும் புகார் தந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர். புகாரில், 'இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கத்திலும் மொழி ரீதியாக இன ரீதியாக மக்களிடையே பிளவு ஏற்படுத்தி தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி தமிழர்கள் தான் கொலைசெய்தார்கள் எனவும் இந்திய இராணுவத்தை இழிவு படுத்தி கொச்சை படுத்தி தொடர்ச்சியாக பேசிவரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்' என விஜய பாரத மக்கள் கட்சி சார்பாக வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகியான சரவணன் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.