தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன்பும் பாமக தனது கட்சியின் சார்பாக நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று சென்னை தி.நகரில் உள்ள அக்கார்ட் ஹோட்டலில் பாமகவின் 20வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இதில், ஜி.கே. மணி, ஏ.கே மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய ராமதாஸ், ''ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம். ஒரு நபர் கூட (புகைபிடிப்பதை போல் கையை வைத்துக்கொண்டு) புகைபிடிக்க கூடாது. நான் அதிமாக சினிமாவே பாக்குறது இல்ல. ஆனால் சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன் கடைசி விவசாயியா? கடைசி விவசாயமா? (தொண்டர்கள் கடைசி விவசாயி என குரல் எழுப்ப) கடைசி விவசாயி... ரொம்ப அருமையான படம். அதன் பிறகு ஒரு படம் பார்த்தேன் அதுல ஹீரோ வந்து புகைபிடிக்கிறான் (புகைபிடிப்பதுபோல் சைகை செய்தார்) அதே ஹீரோ வேறுவொரு இடத்திற்கு போகிறான். அங்கு மொந்தையில சாராயமோ கள்ளோ ஒருவன் குடித்துக்கொண்டிருக்கிறான். நீயும் குடி என்கிறான். அந்த ஹீரோவும் மொந்தையை வாங்கி குடிக்கிறான். அப்புறம் நான் அந்த படத்தை பாதியிலேயே நிறுத்திட்டேன். இனிமே நாம படமே பார்க்க கூடாது என நிறுத்திட்டேன்'' என்றார்.
சினிமா தலைப்புகள் ஆங்கிலத்தில் வைக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ''எல்லாமே தமிழில் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில் இருக்கணும் ஆனால் வைக்கமாட்டீங்கிறாங்க. அதற்கு நான் ஒரு படம் எடுத்தேன். எடுத்தேன் என்றால் என்னிடம் பணம் இல்ல. எங்க எம்.எல்ஏ ஒருத்தர் இருந்தார் சண்முகம்'னு. அவர்கிட்ட சொன்னேன். அவர் சந்திரசேகரன் என்பவரை இயக்குநராக வைத்து படம் எடுத்தார். அவர் கலைஞரின் உறவினரும் கூட. படத்தின் பெயர் இலக்கணம். அப்புறம் கலைஞரை கூப்பிட்டேன் அந்த படத்தை பார்க்க கலைஞரும் வந்தாரு. அப்பொழுது கலைஞரிடம் சொன்னேன் படத்தில் எங்காவது ஒரு ஆங்கில வார்த்தை அல்லது பிறமொழி வார்த்தை இருப்பதை கண்டறிந்தால் ஒரு லட்சம் ரூபாய் தருவதாக சொல்லிருக்காங்க அய்யா என்று. அதற்காக படம் முடிந்து பெயர் போடும் வரை கலைஞர் அங்கயே இருந்தார். ஒருவேளை அப்படி இருந்தால் ஒரு லட்சத்தை வாங்கிக்கொள்ளலாம் என கலைஞர் பார்த்தாரோ என்னவோ... வெளியே வந்ததும் படம் எப்படி இருக்கு என கேட்டதற்கு 'சிம்பிள் அண்ட் பெஸ்ட்' என்றார்'' என்றார்.