
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில், 2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 3 தொகுதிகளில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றது. இதில், ஆரணி தொகுதி எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற சேவூர்.ராமச்சந்திரனை அறநிலையத்துறை அமைச்சராக்கினார் ஜெ. இப்போது அதே தொகுதியில் அவரையே மீண்டும் நிறுத்தியுள்ளது அதிமுக தலைமை. தேர்தல் அலுவலம் திறப்பு விழா மற்றும் கட்சி நிர்வாகிகளின் சந்திப்பின்போதே அதிமுகவினரே பாராமுகமாக இருந்தனர். இதனால், அமைச்சர் அதிர்ச்சியாகிவிட்டார். ஆரணியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் முன்பு கண்ணீர்விட்டு அழுதவர், உங்களுக்காக நான் என்னவெல்லாம் செய்தேன், மீண்டும் என்னை வெற்றிபெற வையுங்கள் நான் உங்களுக்குத் தேவையானதைச் செய்கிறேன் என வேண்டுகோள் விடுத்தார். பிரச்சாரங்களிலும் அவ்வப்போது கண்ணீர் சிந்துகிறார் அமைச்சர்.
அதிமுகவினரோ, அமைச்சரை வைத்துச் சம்பாதித்ததெல்லாம் பாரிபாபு, வழக்கறிஞர் சங்கர் உட்பட சிலர் தான். கட்சியில் ஒ.செவாக உள்ளவர்களுக்கே ஒன்னும் செய்யல. தன் மகனை அரசியல் உதவியாளராக வைத்துக்கொண்டு கட்சியில் யார், அவுங்க எப்படிப்பட்டவங்க, அவுங்களோட உழைப்பு என்னன்னு தெரியாமல் எடுத்தெறிந்து பேசி, கட்சிக்காரனிடமே காசு வாங்கியவர்தான் அமைச்சர் மகன். இவர்மீது, தொகுதி முழுவதுமே அதிருப்தியுள்ளது. அதனால்தான், ஒரு மாதத்துக்கு முன்பு நடந்த அமைச்சரின் இளைய மகன் திருமணத்துக்குக்கூட முதல்வர் வரவில்லை. இப்போ வந்து எங்களிடம் கண்ணீர் விட்டால் நாங்க ஆதரவு தெரிவிக்கனுமா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
பிரச்சாரத்துக்கு அமைச்சருடன் சென்றால் தினமும் 500 ரூபாய், மதியம் பிரியாணி, பாட்டில் எனவும், அமைச்சர் மகனுடன் பிரச்சாரத்துக்குச் சென்றால் தினமும் 1,000 ரூபாய், பிரியாணி, பாட்டில் எனவும் வாரி வாரி இறைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

திமுகவில் வேட்பாளராக ஆரணி ஒ.செ அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். பண வசதியில் அமைச்சரின் கார் டிரைவரைக் கூட நெருங்க முடியாதவர். ஒ.செவாக இருந்தாலும், மிகவும் எளிய கிராமத்து மனிதர். தனது ஊரான அக்ராபாளையத்தில் இருந்து ஆரணிக்கு பழைய டூவீலரில் வருபவர், வழியில் உள்ள டீ கடைகளில் டீ சாப்பிட்டபடி அந்தவூர் கட்சி நிர்வாகிகளிடம் அரசியல் பேசிவிட்டு ஆரணி நகரத்துக்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்திப்பார். இவர், 2019ல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டபோது, எதிர் வேட்பாளர் ஓட்டுக்கு 1,000 ரூபாய் தர, வேட்பு மனுதாக்கலுக்கே தெரிந்தவரிடம் கடன் வாங்கி டெப்பாசிட் கட்டியவர். மக்கள் மனதில் இருந்ததால் பெரியளவில் வெற்றி பெற்றார். இந்த எளிமை கட்சிகளை கடந்து பொதுமக்களிடம் பெரிய மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் வேட்பாளர் என்றதும் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரனே அதிர்ச்சியடைய செய்துவிட்டது என்கிறார்கள் அதிமுகவினரே.
தொகுதியில் பெரும்பான்மை வன்னியர் என்பதால் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இருந்தாலும் அது இரண்டு பிரிவாகப் பிரிந்து நேரடி பாமக நிர்வாகிகள் அதிமுகவுக்கு சாதகமாகவும், வன்னியர் சங்கத்தினர் திமுக வேட்பாளர் அன்பழகனுக்கு ஆதரவாகவும் நிற்கிறது. இதுவும் அமைச்சரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதைப்பார்த்து தனது முதலியார் சமூகப் பிரதிநிதிகளிடம் பேசியபோது, 'இப்போதுதான் எங்க நினைவு வந்ததா' எனப் பாராமுகம் காட்டியுள்ளனர். புதிய நீதிக்கட்சி நிறுவனம் ஏ.சி.சண்முகம் அமைச்சருக்கு ஆதரவாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் அவருக்கு எதிராகவே நிற்கின்றனர்.
அமமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாஸ்கரன் என்பவரை நிறுத்தியுள்ளது. மணிகண்டன் என்பவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ளனர். இருவரும் தொகுதியில் இருக்கிறார்களா எனக் கேட்கும் நிலையிலேயே உள்ளனர். தனது வெற்றிக்காக அமைச்சராக இருந்தும் மற்ற தொகுதிகளுக்குக் கூடச் செல்லமுடியாமல் அங்கேயே முடங்கியுள்ளார்.