கோவை மாநகராட்சியில் மொத்தம் நூறு வார்டு கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 96 பேர் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மூன்று பேர் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு கவுன்சிலரும் உள்ளனர். இதனையடுத்து கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி கல்பனா ஆனந்தகுமார் கோவை மேயராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த மாநகராட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியின் 19ஆவது வார்டில் வெற்றி பெற்று கவுன்சிலர் ஆனது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில்தான் கோவை மேயர் கல்பனா ஆனந்த குமார் தனது பதவியைக் கடந்த ஜூலை 3ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்திருந்தார். மேலும் மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையே மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே கல்பனாவுடன் வாக்குவாதத்தில் ஈட்டுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று (06.08.2024) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான எற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மாநகராட்சியின் பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில் மாநகராட்சியின் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான மா.சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாநகராட்சி துணை ஆணையாளர் ச.செல்வ சுரபி, உதவி ஆணையர்கள் உஷாராணி (கணக்கு), மோகன சுந்தரி (நிர்வாகம்) உட்பட மாநகராட்சி பலர் உடன் அலுவலர்கள் இருந்தனர்.
முன்னதாக அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்று குறித்து அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே.என் நேரு ஆகியோர் நேற்று (05.08.2024) கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் கோவை மாநகராட்சியின் 29வது வார்டில் இருந்து கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.