தேனி பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், தங்க தமிழ்செல்வனும் களத்தில் குதித்திருக்கிறார்கள்.
இதில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட ரவீந்திரநாத் தேர்தல் பிரச்சாரத்தில், தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். இப்படி மக்களிடம் ரவீந்திரநாத் ஓட்டு கேட்க செல்வதற்கு முன்பே அந்தந்த பகுதியிலுள்ள கட்சிக்காரர்கள் தங்கள் பகுதியில் இருக்கும் பெண்களைத் திரட்டி, தலைக்கு 500 ரூபாய் என பேரம் பேசி டோக்கன் கொடுத்து, ஆரத்தியுடனும், கும்ப மரியாதையுடனும் அந்தப் பெண்களை வரிசையில் நிற்க வைத்து விடுகிறார்கள்.
அதன்பின் சிறிது நேரத்திலேயே ஓட்டு கேட்க வரும் ஓ.பி.எஸ். மகனின் பிரச்சார ஜீப்முன் அந்தப் பெண்கள் சுற்றி நின்று விடுவார்கள். இவையெல்லாம் ஜெயலலிதா பிரச்சாரத்தின்போதுதான் நடக்கும். அதே பாணியை ஓ.பி.எஸ். மகனும் கடைபிடித்து வருகிறார். அதன்பின் கூடியிருந்த அந்த பெண்கள் மத்தியில் ஓ.பி.எஸ். மகன் பேசியவுடனே அருகே இருக்கும் அமைச்சர் உதயக்குமார் கூட்டத்தில் இருக்கும் பெண்களிடம் குலவை போடசொல்கிறார். அதைக் கேட்டவுடனே அமைச்சர், ரொம்ப சந்தோஷம், தம்பி வெற்றி பெற்று விடுவார் என்று சொன்னவுடனே ஓ.பி.எஸ். மகனின் பிரச்சார ஜீப் அடுத்த ஸ்பாட்டுக்கு சென்று விடுகிறது. அதன்பின் உடன் வரும் ஓ.பி.எஸ். மகனின் ஆதரவாளர்கள் அந்தப் பெண்களிடம் இருக்கும் டோக்கனை வாங்கிக் கொண்டு தலைக்கு 500 ரூபாய் வீதம் பகிரங்கமாகவே கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள்.
அந்தளவுக்கு அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் உதயகுமார் களம் இறங்கி வருகிறார். ஆனால் வேட்பாளரான ஓ.பி.எஸ். மகனை தேர்தல் அதிகாரிபின் தொடர்ந்து வருகிறார். அப்படி இருந்தும் கூட ஓ.பி.எஸ். மகன் என்பதால், தேர்தல் விதிமுறைகளை மீறி பணப்பட்டுவாடா நடப்பதையும் கண்டு கொள்ளாமலேயே போய்விடுகிறார்கள். இப்படித்தான் பெரியகுளம் ஒன்றியம், கம்பம் ஒன்றியம் உட்பட சில பகுதிகளில் ஓ.பி.எஸ். மகன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் ஓ.பி.எஸ். மகனான ரவீந்திரநாத் பேசும்போது... அம்மா, அக்கா, தங்கச்சி எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா? நான் உங்களை வீடு தேடி வந்து ஆதரவு கேட்டிருப்பேன். ஆனால் 6 சட்டமன்ற தொகுதிக்கும் போக வேண்டும் என்பதால் வர முடியவில்லை. நான் இப்பகுதிக்கு புதியவன் அல்ல, இந்த மண்ணின் மைந்தன் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் மகனும்கூட. இதற்கு முன்பு இதே பகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு இங்கு வந்து ஓட்டு கேட்டிருக்கிறேன். தற்போது உங்கள் வீட்டுப் பிள்ளையான எனக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்தால், நமது மாவட்ட பகுதி வழியாக திண்டுக்கல் முதல் சபரிமலை வரை செல்லும் அகல ரயில் பாதை திட்டத்தை கொண்டுவருவேன்.
20 ஆண்டுகளுக்கு முன்பு நமது தேனி மாவட்ட பகுதி அடிப்படை வசதியில் பின் தங்கியிருந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு வாக்கு சேகரிக்க வரும் மற்ற வேட்பாளர்கள் உங்களையெல்லாம் குழப்புவார்கள். அதையெல்லாம் நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன். வெளியூரான ஒருவர், ஈரோட்டில் இருந்து வந்திருக்கிறார். அவர் வெளியூர்க்காரர் அவரை நீங்கள் தேடிப்போய்தான் பார்க்கமுடியும். இன்னொரு வேட்பாளர் வாயிலேயே கோலம் போடுவார், அது ஒன்றுக்கும் உதவாது. எனவே உங்கள் வீட்டு பிள்ளையான எனக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். இந்த ஓ.பி.எஸ். மகனின் தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.