Skip to main content

“முதல்வர் ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்” - அமைச்சர் உதயநிதி!

Published on 07/07/2024 | Edited on 07/07/2024
CM is watching and doing every project Minister Udayanidhi

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி அடுத்துள்ள திருவாமாத்தூர் கிராமத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், “மக்களின் மகிழ்ச்சியும், எழுச்சியும் திமுகவின் வெற்றியைக் காட்டுகிறது. விக்கிரவாண்டியில் உயர்மட்ட பாலம், சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கடந்த 3 வருடங்களில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களுக்காக ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார். ரூ.3.18 கோடி மதிப்பீட்டில் கெடார் ஊராட்சியில் மாதிரி பள்ளிகள், மாணவர் குடியிருப்பு கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டும். விக்கிரவாண்டியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். முண்டியம்பாக்கம் முதல் கொசப்பாளையம், ஒரத்தூர் முதல் முண்டியம்பாக்கம் வரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கட்டப்படும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

வாதானூர் வாய்க்காலை தூர்வாரும் பணி விரைந்து முடிக்கப்பட்டு நீர் வழித்தடம் சரி செய்யப்படும். புதிய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்படும். ரூ.62 கோடி மதிப்பில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, தேசிய நெடுஞ்சாலை அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் விரைந்து முடிக்கப்படும்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்