ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பிப் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். பொதுக்குழு வழக்கு காரணமாக அதிமுகவில் வேட்பாளரை இறுதி செய்வதில் பல சிக்கல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஒரு வழியாக அதிமுகவின் வேட்பாளர் இறுதி செய்யப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் ஈரோடு கிழக்கில் பிரச்சாரம் மேற்கொள்ள நட்சத்திர தேர்தல் பரப்புரையாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திமுக கூட்டணி வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு உள்ளிட்ட பலர் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஈரோடு கிழக்கில் முதல்வர் பிரச்சாரம் செய்யும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப்போவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சத்யா நகர், சம்பத் நகர் உட்பட 19 இடங்களில் முதல்வர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட இருக்கிறார். அதேபோல் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிப்ரவரி 19 மற்றும் 20 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.