சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், தமிழகம் முழுவதும் பணியாற்றி வருகின்ற 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரோனா பேரிடர் காலத்தில் 2019ஆம் ஆண்டு எம்.ஆர்.பி தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 3485 செவிலியர்களை நிரந்தரமாகப் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது எம்.ஆர்.பி. தேர்வின் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்றுவரும் டிஎம்எஸ் வளாகத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று போராட்டக் குழுவினருக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ''அவர்களது தேவையைத் தக்க வைத்துக் கொள்வது நமது கடமையும் கூட. நாட்டு மக்களும் அரசுக்குக் கேட்கும் வண்ணம் அதை எடுத்துச் சொல்ல வேண்டும். இவர்களுக்குப் பரிந்துரைப்பது நமக்கு, நம்முடைய ஆரோக்கியத்திற்கு நாம் பரிந்துரை செய்வது போலத்தான் பொருளாகும். இங்கே நிறைய வேலை இருக்கிறது. ஒரு நல்ல அரசு வேலை வாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர்த்து, இருக்கும் வேலைவாய்ப்புகளை சிதறடிக்காது. இந்த வேலைக்கான தேவை இருக்கிறது. அதனால் அரசு இதை மிகக் கவனத்துடன் அணுக வேண்டும்'' என்றார்.