தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்கிக் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தற்போது சற்று குறைந்துள்ள மழை மீண்டும் 9 ம் தேதி முதல் மழைப்பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இடைப்பட்ட சில நாட்களில் கால்வாய்களில் அடைபட்டுள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 4 நாட்களுக்குள் எவ்வளவு எவ்வளவு பணிகள் மேற்கொள்ள முடியுமோ அவ்வளவு பணிகளையும் முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “மழை நீர் தேங்கி வடிந்த பகுதிகளில் கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 200 இடங்களில் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் மழை துவங்குவதற்குள் என்னென்ன பணிகள் இருக்கிறதோ அனைத்து பணிகளையும் போர்க்கால அடிப்படையில் முடுக்கி விட்டுள்ளோம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. எதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சிக்கு கெட்ட பெயர் கொண்டு வர வேண்டும் என நினைக்கின்றனர். முதல்வர் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டார். இப்படிப்பட்ட நோக்கங்களை நிறைவேற்ற நிச்சயம் தடைக்கல்லாக இருப்பார்” எனக் கூறினார்.