கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில், ந்தியாவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 லிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 694 லிருந்து 724 ஆக உயர்ந்துள்ளது. இதில் இந்தியர்கள் 677 பேர், வெளிநாட்டினர் 47 பேர் என மொத்தம் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 137, மகாராஷ்டிராவில் 130, கர்நாடகாவில் 55 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43 லிருந்து 67 ஆக அதிகரித்துள்ளது.. மேலும் கொரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்க போலீசார் முகக் கவசம் அணிந்து ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் திமுகவின் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்றும், தருமபுரி அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் நிதியும், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு 20 லட்ச ரூபாய் நிதியும் வழங்கியுள்ளதாகக் கூறினார். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூடி மறைப்பதாகத் தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் குற்றச்சாட்டு கூறினார். பின்பு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நீங்கள் அனுமதித்தால் என் உயிரைப் பணயம் வைத்து மருத்துவ சேவை செய்ய நான் தயார்., அனுமதி அளிக்க நீங்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார்.