Skip to main content

“திமுகவினர் ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்திருப்பார்களா..” ஓ.பன்னீர்செல்வம் 

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

"Did the DMK buy a chocolate .." O. Panneerselvam

 

தேனி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர், பெரியகுளம், தேனி, பூதிப்புரம், பழனிசெட்டிபட்டி, வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

 

அப்போது பேசிய ஓ.பி.எஸ்., “தொண்டர்களுக்காக, ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக 1972ல் அதிமுக எம்.ஜி.ஆர். தோற்றுவித்தார். இந்த 50 ஆண்டு காலத்தில் 30 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆளும் உரிமையை அதிமுகவிற்கு மக்கள் கொடுத்துள்ளனர். 30 ஆண்டுகால ஆட்சியில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்கள் நல திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தியுள்ளனர்.

 

2021ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியே அமையும் என்ற நல்ல சூழல் இருந்தநிலையில், 505 பொய்யான வாக்குறுதிகளை திமுக கூறி சொற்ப ஓட்டுக்கள் வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்தது. வெற்றி பெற்றதும் எனது முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வது தான் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அவரும் வீட்டிலிருந்து கொண்டு கையெழுத்து போட்டு போட்டு பார்க்கிறார். நீட் ரத்தாகவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து ஜனாதிபதி கையெழுத்திட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் 5 பவுன் நகை கடனை ரத்து செய்வோம் என ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். மேலும் இப்பவே போங்க நகை கடன வாங்குங்க. பதவி ஏற்றவுடனே நகை கடனை ரத்து செய்து நகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். இவர்களை நம்பி 50 லட்சம் பேர் நகை கடனை வாங்கினர். இப்பொழுது தகுதி உள்ளவர்களுக்கு தான் நகை கடன் தள்ளுபடி என்று 13 லட்சம் பேருக்கு மட்டும் தள்ளுபடி வழங்கியுள்ளனர். மீதமுள்ள 37 லட்சம் பேருக்கு நாமம் தான்.  குடும்ப தலைவிக்கு மாத உரிமை தொகையாக ரூபாய் 1000ம் வழங்குவோம் என்றனர். இன்னும் வழங்கவில்லை. முதியோர் பென்சன் 1000லிருந்து 1500 ஆக உயர்த்தி வழங்குவோம் என்றனர் இன்னும் வழங்கவில்லை. எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத திமுக மீது மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். 

 

யார் ஆட்சியில் நல்லது செய்துள்ளனர் என எடைபோடும் தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் உள்ளது. நல்லாட்சி தருபவர்களுக்கு உங்களின் ஆதரவை தர வேண்டும். 2006 முதல் 2011 வரை நடைபெற்ற திமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா மின் தட்டுப்பாட்டை ஒரே வருடத்தில் நீக்கி மின்மிகை மாநிலமாக மாற்றியதுடன் 100 யூனிட் இலவச மின்சாரத்தையும் வழங்கினார். கரோனா காலத்தில் கூட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பலசரக்கு உள்ளிட்ட தொகுப்பு அதிமுகவினரால் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போதும் கரோனா உள்ள நிலையில் திமுகவினர் ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்திருப்பார்களா? கொடுப்பவர்கள் அதிமுகவினர். எடுப்பவர்கள் திமுகவினர் என நிரூபணம் ஆகியிருக்கிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்