சென்னையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை மற்றும் திமுக இளைஞரணி செயலி தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இவ்விழாவில் பேசிய அவர், “இளைஞரணியை கலைஞரோடு இருந்தபோதுதான் துவக்கி வைத்தோம். திமுக இளைஞரணி சார்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். அண்ணாவின் மணி விழாவிற்கு அவரை அழைத்தோம். வருகிறேன் என ஒப்புக்கொண்டார். ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றுவிட்டார்.
சிகிச்சை முடிந்து மீண்டும் வந்தபொழுது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சி தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ எனப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி. இப்போதைய கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் அண்ணா அவ்விழாவில் கலந்துகொண்டார். இதெல்லாம் வரலாறு.
மீண்டும் கோபாலபுரத்தில் அண்ணாவின் தேதி வாங்கி அந்நிகழ்ச்சியை நடத்தினோம். கலைஞர் வீட்டின் பக்கத்தில் கிருஷ்ணன் கோவில் உள்ளது., அதை மேடை போட்டு மறைத்துவிட்டோம். எங்கள் பகுதி மருத்துவர் ஒருவர் கலைஞரிடம் வந்து உங்கள் மகன் ஸ்டாலின் கோவிலை மறைத்துவிட்டான். நாங்கள் வெளியே செல்லும்பொழுது சாலையில் செருப்பைக் கழட்டி அங்கே இருந்தே கடவுளை வணங்கி விட்டுச் செல்வோம். இப்பொழுது தெரியவில்லை என கலைஞரிடம் கூறினார்.
இதன் பின் மேடையில் பேச வந்த கலைஞர், “என் மருத்துவர் என்னிடம் இப்படி கூறினார். ஒரு வேளை கிருஷ்ண பரமாத்மா ஸ்டாலின் கனவில் வந்து... அனைவரும் சாலையில் நின்று வணங்கிவிட்டுச் செல்கின்றனர். யாரும் உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள். நீ மேடையை இப்படி போடு அனைவரும் உள்ளே வரட்டும் எனக் கூறியிருப்பார் என நினைக்கின்றேன்” என கலைஞர் கூறினார். இதெல்லாம் நடந்தது” என முதல்வர் பேசினார்.