அதிமுகவுடனும் திமுகவுடனும் ஒரே நேரத்தில் பேரம் பேசியதை அம்பலப்படுத்தியதால் கூட்டணி விவகாரத்தில் தேமுதிகவுக்கு திமுக கதவை அடைத்தது. இதையடுத்து இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், திமுகவையும், செய்தியாளர்களையும் ஆத்திரத்தில் வறுத்தெடுத்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இந்நிலையில் இன்று தேமுதிகவில் இருந்து வெளியே திமுகவில் இருக்கும் சந்திரகுமார் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பிரேமலதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர், ‘’பத்திரிகையாளர்களை வரச்சொன்னால், செய்தி கொடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, கட்சி அலுவலகத்தில் 200 பேரை வைத்துக்கொண்டு, பொதுக்கூட்டத்தில் பேசியது மாதிரி பிரேமலதா பேசியதும், அருகில் இருப்போர் சிரித்ததையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
கலைஞர் மருத்துவமனையில் இருந்தபோது அவரை சந்திக்க அனுமதி கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் அனுமதி மறுத்துவிட்டதாகவும் திரும்ப திரும்ப பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா. கேப்டனால் அன்றைய நிலையில் வந்து பார்க்க முடியாத நிலை இருந்தது. இதுதான் உண்மை. அவர் தடுத்ததாகவே எடுத்துக்கொண்டாலும், சுதீஷுக்கு எப்படி திமுக அனுமதி கொடுத்தது?
செய்தியாளர்களை நீ, வா என்று பேசி, மிகவும் கீழ்த்தரமான அரசியல்வாதியாக மாறிவிட்டார் பிரேமலதா. அப்புறம், திமுகவையும், திமுகவினரையும் தரக்குறைவாக கடுமையாக விமர்சிக்கிறார். நானும் ஒருகாலத்தில் தேமுதிகவில் இருந்தவன். அப்படி இருந்தும் சொல்கிறேன். அதைவிட தரங்கெட்ட வார்த்தையில் தேமுதிக என்பதற்கு ஆபாசமாக, அறுவறுக்கத்தக்க வார்த்தையில் அர்த்தம் சொல்ல முடியும். ஆனால், ஒரு அரசியல் இயக்கத்தை பற்றி அப்படியெல்லாம் அநாகரீகமாக பேசக்கூடாது.
பிரேமலதா இன்றைக்கு விரக்தியில் இருக்கிறார். அதனால்தான் இப்படி பேசுகிறார். பூட்டிய அறையில் எலியை விட்டால் அதுக்கு எங்கே போவது என்று வழி தெரியாது. அங்கேயும் இங்கேயும் தடுமாறி ஓடிக்கொண்டே இருக்கும். அதே போல் இன்றைக்கு தேமுதிக கட்சியின் நிலை என்று சொல்ல மாட்டேன். அந்த குடும்பத்தினரை இப்படி ஆக்கிவிட்டது. ஒரு பக்கம் எங்கள் தலைவர்களை பார்த்து பேசுகிறார்கள். இன்னொரு பக்கம் பாஜக அமைச்சரை பார்த்து பேசுகிறார்கள். உயிருக்கு பயந்த எலி போல ஆகிவிட்டார்கள்.
எங்கள் வீட்டு வாசலில் க்யூவில் நிற்கிறார்கள். அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்று ரொம்ப கேவலமாக பேசிக்கொண்டிருக்கிறார் கேப்டன் மகன். நான் கேட்கிறேன்...இன்றைக்கு யார், யார் வீட்டு வாசலில் நிற்கிறார்கள். எங்களுக்கு மறுவாழ்க்கை கொடுங்கள் என்று யார், யாரிடம் காலை பிடித்து பிச்சை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பிரேமலதா கட்சியில் அடியெடுத்து வைத்தது முதல் கட்சியை பணம் கொழிக்கும் இடமாக மாற்றிவிட்டார். தேர்தலுக்கு தேர்தல் எல்லோரிடமும் பேரம் பேசுகிறார்.
பிரேமலதாவின் யோக்கியதை இதுதான் ...சுதீஷின் யோக்கியதை இதுதான்....என்று துரைமுருகன் எடுத்துச்சொல்லிவிட்டார். அந்த ஆத்திரத்தில்தான் இப்படி பேசிக்கொண்டிருக்கிறார் பிரேமலதா’’என்று தெரிவித்தார்.