டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கர்நாடாக முதல்வர் சித்தராமையா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் மற்றும் இமாச்சல் பிரதேசம் முதல்வர் சுக்விந்தர் சுகு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் செயற்குழுக் கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, “சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கமிட்டி ஒருமனதாக ஆதரிக்கிறது. இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்துகின்றன. காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அரசியல் அல்ல; அது நீதியின் அடிப்படையிலான கோரிக்கை. பா.ஜ.க.வால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாவிட்டால், அக்கட்சி ஆட்சியில் இருந்து விலகட்டும்.
பா.ஜ.க. ஆளும் 10 மாநில முதல்வர்களில் ஒரே ஒருவர் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை (ஓ.பி.சி.) சேர்ந்தவர். ஆனால், காங்கிரஸ் ஆளும் நான்கு மாநிலங்களின் முதல்வர்களில் மூன்று பேர் ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி, இதர பிற்படுத்தப்பட்ட (ஓ.பி.சி.) மக்களுக்காக எதுவும் செய்யவில்லை.
தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத்திற்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப் போகிறது” என்று தெரிவித்தார்.