தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என்று அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார். அவர் 10ந் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "திமுக என்ற கட்சி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்டது. அவர் எங்களின் செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் மறைவிற்குப் பிறகு எந்தப் பதவியையும் நாங்கள் அக்கட்சியில் எதிர்பார்க்கவில்லை. இருந்தபோதிலும் தொடர்ந்து திமுகவை ஆதரிக்கிறோம்.
கடந்த அக்டோபர் மாதம் திருப்பூரில் எங்கள் சங்கத்தின் இருபதாவது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் படி, அறிஞர் அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். விடுதலைப் போரில் பங்கெடுத்த கொடிகாத்த குமரன் அவர்களுக்கு அவர் பிறந்த சென்னிமலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். திருப்பூர் ரயில் நிலையத்துக்கு குமரன் பெயர் சூட்ட வேண்டும். திருமுருக கிருபானந்த வாரியார் பெயரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு சூட்ட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். செங்குந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பத்து சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதி தடை செய்ய வேண்டும். ஜரிகைக்கு மானியம் வழங்க வேண்டும். இலவச வேட்டி, சேலை நெசவு செய்யும் தொழிலாளர் கூலி உயர்வு தடையின்றி வழங்க வேண்டும்.
கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். விசைத்தறி, கைத்தறிகளை நவீனப்படுத்த வேண்டும். மாணவர் சீருடை உற்பத்தி பணியை கைத்தறிகளுக்கு வழங்க வேண்டும். நெசவாளர் குழந்தைகள் உயர்கல்வி பயில உள்ஒதுக்கீடு வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும். எங்கள் பாவடி நிலங்களுக்கு செங்குந்தர்களுக்கு பட்டா தர வேண்டும். கைத்தறிக்கும் விசைத்தறிக்கும் இலவச மின்சாரத்தின் அளவை உயர்த்த வேண்டும். அர்ஜுனா விருது பெற்ற இளவேனில் வாலறிவன் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளது. எனவே, திமுகவை ஆதரிக்கிறோம். இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எங்கள் சமூக மக்கள் ஆதரவளித்து வாக்களித்து காங்கிரஸ் வேட்பாளரை வெற்றிபெற வைப்பார்கள்'' என்றார்.