தமிழகத்தில் மாமிசக் கடைகளைத் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் இந்து தர்ம எழுச்சி மாநில மாநாடு சம்பந்தமாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வள்ளலாரின் 200ஆவது அவதார விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகிறோம். வள்ளலாரின் கருத்துகளை மையமாக வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக அரசு விழா எடுக்கிறது; அதை வரவேற்கிறோம். ஆனாலும் சன்மார்க்க கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். உடனடியாக தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும். தமிழகத்தில் மாமிசக் கடைகள் தடை செய்யப்பட வேண்டும்.
மக்கள் ஐடி என்ற பெயரில் புதிய அட்டையை தமிழக அரசு வழங்குகிறது. ஏற்கனவே ஆதார் வெற்றிகரமாக நடைமுறையில் இருக்கும்போது மக்கள் ஐடி என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். பிரிவினைவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக மாறும்” எனக் கூறினார்.