சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்து, தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் கரோனா தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார் சசிகலா. சிகிச்சை முடிந்து விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.
சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், தற்போது சர்க்கரை அளவு கட்டுக்குள் உள்ளது. இரத்த அழுத்தம், இதய செயல்பாடுகள் அனைத்தும் சீராக உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷ்னர் கமல்பந்த்திடம், சசிகலாவிற்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு வழக்கமான பாதுகாப்பை போலீசார் வழங்கியுள்ளனர். சசிகலா அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு உள்ள கட்டடத்தின் மூன்று நுழைவாயில்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்பதால், தமிழகத்தில் ஏற்கனவே சசிகலாவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கார்டன் சிவா என்பவரின் தலைமையிலான பத்து மெய்க்காப்பாளர்கள் அந்த மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்த ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு வழங்கியதும் இந்தக் குழுவினர்தான். அவர்கள்தான் தற்போது சசிகலாவுக்கும் பாதுகாப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.