திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது ராகுல், “வணக்கம். தமிழக மக்களோடு உணர்வுப்பூர்வமான குடும்ப உறவு எனக்கு இருக்கிறது. இந்நாட்டிற்கு பிரதமர் மோடி என்ன செய்தார்? மோடி ஆட்சியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தியாவில் படித்த தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இந்தியாவை மத அடிப்படையில், மொழி அடிப்படையில், கலாச்சார அடிப்படையில், ஜாதி அடிப்படையில் பிரிக்கிறார் நரேந்திர மோடி.
ஒரே நாடு, ஒரே கலாச்சாரம் என்கிறார். தமிழ் இந்தியாவின் மொழி அல்லவா. தமிழகத்தின் வரலாறு இந்தியாவின் வரலாறு அல்லவா, யார் எதைச் செய்யவேண்டும். எதைச் செய்யக்கூடாது என்று சொல்வதற்கு நரேந்திர மோடி யார்?
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வை ரிமோட் மூலம் பிரதமர் இயக்கிவருகிறார். அதேபோல், தமிழக மக்களை இயக்கப் பார்க்கிறார். தமிழக மக்கள் என் மீது பெரிய அன்பை வழங்கி வருகின்றனர். வணக்கம்” என்று தமிழில் கூறி தனது பேச்சை முடித்தார்.
அதைத் தொடர்ந்து வேடசந்தூரில் 1978ஆம் ஆண்டு நடந்த விவசாயிகள் போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் பலியான விவசாயிகளின் நினைவிடத்தில் ராகுல்காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஜோதிமணி எம்.பி., ஆகியோர் உடன் இருந்தனர்.