தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி சென்றார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களிடம் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம் குறித்தும் பாஜக, அதிமுக கூட்டணி குறித்தும் 2024 தேர்தலுக்கு பாஜகவின் வியூகங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2022 இல் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. அவற்றின் மீது எவ்வகையான நடவடிக்கைகளும் இல்லாமல் காலையில் இருந்து மாலை வரை சமூக வலைதளங்களில் மட்டும் காவல்துறை கண்ணாக இருப்பது எவ்வகையான நடைமுறையைக் காட்டுகிறது.
கூட்டணிக் கட்சித் தலைவர்களே என் மீது விமர்சனம் வைக்கிறார்கள். இதை நான் வரவேற்கிறேன். பாஜக வளர்ச்சியை அவர்கள் ரசிக்கவில்லை. அது நல்லது தான். யாராக இருந்தாலும் அவர்கள் கட்சி வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் பாஜகவை வளர்க்க வேண்டும் என நினைப்பார்கள் என்றால் முட்டாள்கள். இன்னொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் நான் முட்டாள். அவர்கள் பெரும் தலைவர்கள். அரசியலைப் பொருத்தவரை யாரும் நண்பன் இல்லை. இதை என்று உணர்ந்து கொள்கிறோமோ அன்று தான் பாஜக வளர்ச்சி. அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை. பிரதமர் மோடி சொல்வது போல், உங்கள் கடையைத் திறக்க நான் இங்கு அரசியல்வாதியாக இல்லை” என்றார்.