Sasikala evokes caste feeling! ADMK  resolution in Salem

அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையில், அவர் கட்சியினரிடையே சாதிய உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசிவருவதைக் கண்டிக்கிறோம் என்று சேலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisment

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

Advertisment

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட கிடையாது. கட்சியினரிடையே சசிகலா, தொலைபேசியில் சாதிய உணர்வுகளைத் தூண்டுவதுபோல் பேசிவருவதைக் கண்டிக்கிறோம்.

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அனைவரையும் கட்சியைவிட்டு நீக்கியதை சேலம் மாநகர் மாவட்ட அதிமுக வரவேற்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றிக்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் ஆகியோருக்கும் தொண்டர்களுக்கும், அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் அதிமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் வெற்றிபெற பாடுபட்ட நிர்வாகிகளுக்கும்கூட்டணிக் கட்சியினருக்கும், சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

கரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவைத்தலைவர் பன்னீர்செல்வம், எம்எல்ஏ பாலசுப்ரமணியம், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், பகுதி செயலாளர்கள் யாதவ மூர்த்தி, சண்முகம், சரவணன், ஜெகதீஸ்குமார், பாலு, முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.