அரக்கோணம் தனித் தொகுதி. இந்த தொகுதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது இருந்தாலும் இதன் பெரும்பாலான பகுதிகள் சென்னை மாநகர விரிவாக்கப் பகுதிகளுடன் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான மக்கள் சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளை நம்பியே உள்ளனர். விவசாயிகள், தொழிலாளர்கள் நிரம்பிய மாவட்டம். இரயில்வே தொழிற்சாலை சில அமைந்துள்ள தொகுதி இது.
இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக கடந்த 10 ஆண்டுகளாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ரவி. ராணிப்பேட்டை மா.செவாகவும் ரவி இருப்பதால் தனது கட்சியினரை ஒருங்கிணைத்து விரட்டி விரட்டி தனக்காக வேலை வாங்குகிறார். ஆனாலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அவரை கேள்வியாய்க் கேட்டு டென்ஷன் செய்கின்றனர். தொகுதி மக்களுக்கு அவ்வளாக எதுவும் செய்யாதது அவருக்குப் பெரிய மைனஸ்.
இத்தொகுதியை, திமுக தனது கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. வழக்கறிஞர் கௌதம் சன்னாவை கட்சியினர் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கு மக்களுக்குத் தெரியவில்லை. வெளியூர் வேட்பாளர் என்பதால் திமுகவினர் சோர்வில் உள்ளனர். அவரின் பேச்சு, செயல்கள் அவர்களை தெம்பாக்க தீவிரமாகக் களத்தில் உள்ளனர். பானை சின்னத்தைக் கிராமங்களில் கொண்டு சேர்ப்பதில் சிரமப்படுகின்றனர் திமுகவினர்.
தொகுதியில் கணிசமாக வன்னியர்கள் இருக்கிறார்கள். அவர்களை விசிக பக்கம் திருப்பிவிடும் பணியில் தீவிரமாக உள்ளார் வடக்கு மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும், அரக்கோணம் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன். அதோடு முதலியார், சிறுபான்மையின வாக்குகள் தங்களுக்கே விழும் எனப் பெரிதும் நம்புகின்றனர். அதற்கான வேலைகளை திமுக நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். பட்டியலின அரசியல் கட்சிகளின் மறைமுக, நேரடி ஆதரவால் விசிக வேட்பாளர் கௌதம் சன்னா முந்திச்செல்ல முயற்சிக்கிறார்.
அதிமுக வேட்பாளர் ரவி, வன்னியர் வாக்குகளைப் பெற்றுத் தர பாமகவை பெரிதும் நம்பி அவர்களை நன்றாகக் கவனிக்கிறார். ஒரு தரப்பினர், பணத்தால் வாக்குகளைக் கவர திட்டம் வைத்துள்ளதாகச் சொல்கின்றனர். மற்றொரு தரப்பினர், வெற்றியை விட்டுத் தருவதற்கு வாய்ப்பில்லை என்கிறார்கள்.