Skip to main content

‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலி இன்று அறிமுகம்

Published on 17/09/2023 | Edited on 17/09/2023

 

The app Stalin with People was launched today

 

செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்தநாள். அதே செப்டம்பர் 17 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதனை ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக சார்பில் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் கலைஞரின் நூற்றாண்டு விழாவும் தொடங்கி நடைபெறுவதால் இந்தாண்டு முப்பெரும் விழா முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


அந்த வகையில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 17) வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரி பைபாஸ் சாலை அருகில் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் “ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது மயிலாடுதுறை கி. சத்தியசீலனுக்கும், அண்ணா விருது மீஞ்சூர் க. சுந்தரத்திற்கும், கலைஞர் விருது அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும் பாவேந்தர் விருது தென்காசி மலிகா கதிரவனுக்கும் பேராசிரியர் விருது பெங்களூர் ந. இராமசாமிக்கும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதையடுத்து வேலூரில் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணிக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து வேலூருக்கு சென்றுள்ளார். விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இன்று மாலை நடைபெறும் விழாவில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். இந்த செயலியில் மக்களுக்கும், நாட்டுக்கும் திமுக செய்த நலத்திட்டங்கள் குறித்தும், அரசின் செயல்பாடுகள், தொகுதி பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்தும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முப்பெரும் விழாவை முடித்து விட்டு இன்று இரவு 8.35 மணிக்கு காட்பாடியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு திரும்ப உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்