Skip to main content

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்