தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணத்திற்கான தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார். நேற்று திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வெளியாகி இருந்த நிலையில், இந்த சந்திப்பில் அது குறித்தும் விவாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் யூகங்கள் கிளம்பியுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.